×

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. வழக்கில் இருந்து பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை விடுவித்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவில் கடந்த 2018ல் உதவி பேராசிரியையாக பணியாற்றியவர் நிர்மலாதேவி. இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வித்துறையில் செல்வாக்குடன் இருந்தார். இவர், சில மாணவிகளிடம் செல்போனில் ஆசைவார்த்தைகளை கூறி சிலரிடம் அட்ஜஸ்ட் செய்து போகுமாறு கூறியுள்ளார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைத்தளங்களில் வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை போலீசார், பேராசிரியை நிர்மலாதேவி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார், நிர்மலாதேவியை 16.4.2018ல் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றிய முருகனையும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவரையும் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், நீதிபதி டி.பகவதியம்மாள் நேற்று தீர்ப்பளித்தார். அப்போது, ‘‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. எனவே, இருவரும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். இந்த வழக்கில் நிர்மலாதேவி குற்றவாளி என இந்த நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அவருக்குரிய தண்டனை விபரம் பிற்பகலில் தெரிவிக்கப்படும்’’ என கூறியிருந்தார். அப்போது நிர்மலாதேவி தரப்பு வழக்கறிஞர் ‘‘தண்டனையின் மீது வாதிட எங்கள் தரப்புக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்’’ என்றார்.

இதை ஏற்ற நீதிபதி, தண்டனை விபரம் தொடர்பான உத்தரவு நாளைக்கு (ஏப்.30 இன்று) பிறப்பிக்கப்படும்’’ என கூறினார். இதையடுத்து, நிர்மலாதேவி மதுரை பெண்கள் மத்தியச் சிறைக்கு நேற்றுமாலை கொண்டு செல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், நிர்மலாதேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தண்டனையை குறைக்க வாதிட்டார். இதனை அடுத்து தற்போது நிர்மலாதேவிக்கு தண்டனை அறிவிக்கபட்டது. அதில் 10 ஆண்டு சிறை, ரூ. 2.42 லட்சம் அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற நீதிபதி பகவதிஅம்மாள் உத்தரவிட்டுள்ளார்.

The post கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Srivilliputhur court ,Nirmala Devi ,Srivilliputhur ,Murugan ,Karuppasamy ,Virudhunagar district ,
× RELATED கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய...